Friday, November 28, 2008

தண்ணீரில் வந்த பணம் எப்படிப் போயிற்று?

கோமதிக்கு வயது 24. வாட்டசாட்டமானவள். உயரமானவள். எல்லாவற்றையும் விட முக்கியமாக அழகானவள். பார்த்தவர்களைத் திரும்பப் பார்க்க வைக்கும் அழகு. அழகு என்பது எதற்கு இங்கே வலியுறுத்திச் சொல்லப்படுகிறது?

அப்போதுதான் ஒரு சுவாரசியத்தோடு படிப்பீர்கள்.

கோமதி கதை.

காலம் எழுபது ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம்.அவளுடைய வீடு பொதிகைத் தென்றல் ருடிக்கொடுக்கும் ஒரு பசுமையான கிராமத்தில் இருந்தது.கோமதி நான்கு பசுமாடுகளை வைத்துப் பால் வியாபாரம் செய்து கொண்டிருந்தாள்.

அவளுடைய கணவன் சுகவாசி! இருந்த நான்கு வேலி நிலத்தையும் குத்தகைக்குக் கொடுத்து விட்டு, குத்தகைப் பணத்தில் சுகமாக வாழ்ந்து வந்தான்.

கோமதி சுறுசுறுப்பானவள். சுயமாக எதாவது செய்ய வேண்டும் என்பதற்காக மாடுகள், மாட்டுத் தொழுவம், அதைச் சுத்தப் படுத்துதல், மாட்டுத் தீவனம், பால் கரத்தல், இத்யாதி போன்றவற்றில் தன்னை
ஈடுபடுத்திக் கொண்டிருந்தாள்.

அதேபோல காலையில் இருபது லிட்டர் பால் - மாலையில் 20 லிட்டர் பால் எனப் பால்வியாபாரத்தையும் அவள்தான் செய்து வந்தாள். இரண்டு பாத்திரங்களில் பால்.அதை வைத்துத்தூக்க வசதியாக ஒரு கூடை. அந்தக் கூடையைத் தலைமேல் வைத்துப் பிடித்துக்கொண்டு பக்கத்தில் உள்ள நகரத்திற்குக் கொண்டுபோய் வாடிக்கையாளர்கள் வீடுகளில் அவள்தான் விற்றுவிட்டு வரவேண்டும். அதோடு அவள் செல்லும் வழியில் குறுக்கிடும் காட்டாற்றையும் கடந்து சென்று வரவேண்டும்.

காட்டாற்றில் வருடம் முழுவதும் கணுக்கால் அளவு அல்லது முழங்கால் அளவிற்குத் தண்ணீர் ஓடும். மழைக்காலங்களில் மட்டும் வெள்ளப் பெறுக் கெடுக்கும். அப்போது ஆற்றைக கடக்க நினைப்பது முடியாத காரியம். கோமதியும் அந்தக் காட்டாற்றில் தனது சிவந்த பாதங்களை முழுமையாக
நனைத்து விளையாடிக்கொண்டே போய்வருவதில் ஒரு அலாதியான மகிழ்வு கொள்வாள்.

ஆரம்ப காலங்களில் அந்த வியாபரத்தை மிகவும் நாணயமாக செய்துவந்த கோமதி, பின்னாட்களில் காசின் மேல் கொண்ட காதலால், சம அளவு தண்ணீர் கலந்து விற்க ஆரம்பித்தாள்.

அவள் புறப்படும் முன்பு, தங்கள் கிணற்று நீரைத் துணியால் வடிகட்டி, பாலில் சேர்ப்பதைப் பார்த்த, பக்கத்து வீட்டு ஆவுடையா பிள்ளை, அவளைக் கடிந்து கொண்டார்.

"தாயீ, பாலில் எதையும் கலக்காதே! அது பாவச் செயல். எத்தனை பேர் உன்னை நம்பி தங்கள் குழ்ந்தை குட்டிகளுக்கு இந்தப் பாலைக் கொடுக்கி றார்கள். எதாவது நீர்த் தொற்று நோய் ஏற்பட்டால் அந்தப்பாவம் உன்னைத்தான் வந்து சேரும்"

கோமதி அதைக் கண்டு கொள்ளவில்லை!

எப்போது முன்னேறுவதாம்?

தண்ணீர் ஊற்றி விற்க ஆரம்பித்தவுடன் அவள் கையில் அபரிதமாகப் பணம் சேர ஆரம்பித்தது. அந்தக் காலத்தில் ஏது வங்கிச் சேமிப்புக் கணக்கு?

கோமதி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நெல்லைக்குச் சென்று, அந்தப் பணத்தை நகையாக மாற்றிக் கொண்டு வந்து விடுவாள். வாங்கிய நகைகளை வீட்டில் வைக்க யோசனை செய்து தானே அணிந்து கொண்டு திரிவாள். ஒற்றை வடம், இரட்டை வடம் என்று சங்கிலிகள். கையைக் கலகலக்கச்
செய்யும் வலையல்கள் என்று ஒரு நகைக் கடைப் பொம்மை போல் ஆகி விட்டாள். தாய் வீட்டுச் சீதனம், தான் வாங்கியது என அவள் மேனியில் ஐம்பது பவுன்களுக்கு மேல் தங்கம் நகை வடிவில் குடி கொண்டது.

ஒரு நாள், நகருக்குச் சென்று பாலை விற்றுவிட்டு வந்தவள், ஆற்றின் அருகே வந்த பின்தான் கவனித்தாள். ஆற்றில் அரை முழங்கால் அளவு நீர், சுர்'ரென்று சத்தத்துடன் ஓடிக்கொண்டிருந்தது. அவள் உணர்ந்து விட்டாள், இன்னும் சில மணித்துளிகளில் கடுமையான வெள்ள பெருக்கு ஏற்படுவதற்கான
முன்னோட்டம் அது!.

வெள்ளம் வருவதற்குள் ஆற்றைக் கடந்து விடலாம் என்று பரபரப்பாக ஆற்றைக் கடக்க முனைந்தவளை, அவள் பாதி ஆற்றை கடக்கும் முன்பே, இடுப்பளவு உயர்ந்த ஆற்று நீர் புரட்டிப் போட்டு விட்டது. அவள் சுதாகரிக்கும் முன்பே, அடுத்தடுத்தடுத்த நொடிகளில் வந்த பெரு வெள்ளம் அவளோடு
முழுமையாக விளையாட ஆரம்பித்தது.

ஈடு கொடுத்து அவளால் விளையாட முடியவில்லை. அதோடு பயத்தில் மயங்கி விட்டாள்

இரண்டு மணி நேரம் சென்றிருக்கும். ஆற்றின் ஒரு பக்கக் கரையில் மயங்கிக் கிடந்த கோமதி நினைவு திரும்பிவர கண் விழித்துப் பார்த்தாள். ஆற்றில் வெள்ளம் வடிந்திருந்தது.

தான் எங்கே கிடக்கிறோம் என்று பார்த்தாள். தான் செல்ல வேண்டிய பாதையில் இருந்து ஒரு மைல் தூரம் தள்ளி செட்டியார் தோப்பு அருகே இருப்பதை உணர்ந்தாள்.

ஆற்று நீர் தன்னை உருட்டி கொண்டு வந்து அங்கே தள்ளிவிட்டுப் போயிருக்கிறது என்று எண்ணினாள். அதோடு தன்னை உயிரோடு விட்டு விட்டுப் போன ஆற்றை நோக்கிக் கை எடுத்துக் கும்பிட்டாள்.

அதற்குப் பிறகுதான் அவள் கவனித்தாள். அடுத்த நொடி தீயை மிதித்தவள் போலாகிவிட்டாள்.

என்ன ஆகிவிட்டிருந்தது?

அவள் உடலை அலங்கரித்துக் கொண்டிருந்த நகைகளில் ஒன்று கூட இல்லை. எல்லாம் எங்கே போயிருக்கும்? அவள் மயங்கிக் கிடந்தபோது அந்த வழியாகச் சென்ற வழிப்போக்கன் எவனோ ஒருவன் அத்தனை நகைகளையும் அடித்துக் கொண்டு போயிருந்தான்.

ஈரத்தில் உடலோடு உடலாக ஒட்டிக் கொண்டிருந்த தன்னுடைய ஆடைகளைக்கூடச் சரி செய்யும் சிந்தை இன்றி அவள் 'ஓ' வென்று குரல் கொடுத்துத் துக்கத்தோடு கதறி அழுக ஆரம்பித்தாள்.

பின்னே அழுகை வராதா என்ன?

இழந்தது, ஒரு பவுனா அல்லது இரண்டு பவுனா? மொத்தமாக ஐம்பது பவுன்களாயிற்றே!

அப்படியே உட்கார்ந்து ஒரு பத்து நிமிடமாவது அழுதிருப்பாள். அப்போதுதான் அது நடந்தது. யாரோ தன்னை நோக்கி நடந்துவரும் ஓசை கேட்டு. அழுகையுடனேயே திரும்பிப் பார்த்தாள்.

அவளுடைய பக்கத்துவீட்டு மனிதர் ஆவுடையாபிள்ளை அவர்கள்தான் வந்து கொண்டிருந்தார். கையில் காலிக்கூடை. தன்னுடைய தோட்டத்துக் காய்கறிகளை விற்றுவிட்டுத் திரும்புகிறார் போலும்.

வந்தவர் கோமதியைப் பார்த்துக் கேட்டார்," என்ன தாயி, இங்கின உக்கார்ந்து அழுதுக்கிட்டிருக்கே?"

கோமதி நடந்ததைச் சொன்னாள்.

ஒரு குறுகுறுப்புடன், அவள் தன்னுடைய பெரிய விழிகளை ஏற்றி இறக்கி விவரித்ததைக் கேட்ட பிள்ளை சொன்னார்.

சரி, விடுதாயி! போன நகைகள் திரும்ப வரவா போகுது? வா, வீட்டுக்குப் போகலாம்"

"எப்படியண்ணே, உங்களால் இதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடிகிறது? என் துக்கம் தெரியவில்லையா?"

"நீ விசனப்பட்டு என்ன பயன். எல்லாவற்றிற்கும் ஒரு கணக்கு இருக்கிறது. நீ பாலில் தண்ணீர் கலந்து விற்றபோது, அப்படி விற்காதே - அது பாவச் செயல் என்று சொன்னேன். கேட்கவில்லை. பாவச் செயல் எல்லாமே தர்மத்திற்கு எதிரானது. தர்மதேவன் கண்டிப்பாகக் கணக்கைத் தீர்க்காமல்
விடமாட்டான். உன் கணக்கை இப்போது அவன் தீர்த்திருக்கிறான்.

தண்ணீரில் வந்த காசு தண்ணீரிலேயே போய்விட்டது. நீ உழைத்த உழைப்பிற்கு உன் உயிர் மிஞ்சியிருக்கிறது. வா போகலாம்!"

No comments: